மாட்டுப் பொங்கல்

Jan 16th, 2011 | By | Category: தமிழர், பொது

mpong-maNi

மாட்டுப் பொங்கல் பற்றி படித்தவுடன் “அசை” போடத் தோன்றுகிறது. தவறில்லையே..? 29 வருடங்கள் ஓடிவிட்டன பொங்கல் கொண்டாடி.. நினைவுகள் என்றுமே பசுமையாய் நீங்காமல், இன்றுவரை மனதில்.

maatu pongal

தாய்வழி வேளாண் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததினால், பொங்கல் விழாவில் சிறந்த நாள் ‘மாட்டுப்பொங்கல்’ அடியேனுக்கு. சொந்தச் சிற்றூரில் பண்ணையில் பசுக்களும், காளைகளும், எமதருமை எருமைகளும் பளபளவென குளித்து நிற்கும்; உள்ளவர்களுக்கு கொம்புகளில் வர்ண பூச்சுகளுண்டு. அனவைருக்கும் கழுத்தில் நெட்டி மாலை, நெல்லியிலை மாலை, மாவிலை மாலை. ஒரு சில பசுக்களுக்கு மட்டும் கழுத்தில் ‘கருக்கா’ மாலை. கருக்கா – கருத்தரிக்காத வெற்று நெற்கதிர்களைக் கோர்த்து செய்யப்பட்ட கழுத்து மாலை, கழுத்து மேகலை போன்று. வருட முழுதும் சேகரித்து, கவனமாய் கோர்க்கப்பட்ட மாலைகள். நிறைய கோர்ப்பது வெகு கடினம். எனது பாட்டனும் , இரு தாய்மாமன்களும் கைதேர்ந்தவர்கள்.

தினம் உண்ணும் புண்ணாக்கு, கழுநீர் இல்லாமற் இலைகளுடன் கூடிய சோற்றுணவு, கரும்புத் துண்டங்கள் மற்றும் கதலி மதிய உணவாய் மாடுகளுக்கு; பால் கொடுக்கும் பசுக்களுக்கு வெல்லமும் உண்டு.

மதிய உணவில், மனிதர்களுக்கு “மாட்டுக்கறி”. அம்மம்மா அன்புடன் சமைத்த ஒரு கூட்டுக்குழம்பு – அனைத்துக் காய்கறிகளும் சேர்த்து சமைக்கப்பட்ட உணவு. சர்க்கரைவள்ளிக்கிழங்கின் அசட்டு இனிப்பு பிரதானமாய் தனியே நிற்கும்; இருந்தாலும் சுவைக்கு ஈடிருந்திருந்திருக்க முடியாது.

மதியம் 3 மணிக்கு மேல் வாஞ்சியாற்றின் வடவாண்டைக் கரையிலிருக்கும் திடலில் ஊர் மாடுகள் ஒன்று கூடப்பட்டு விரட்டி அடிக்கப்படும் ‘மாடுவிரட்டு’. காளைகள் மட்டும்தானா என்பது சரிவர ஞாபகம் இல்லை. ஓரத்தில் நின்று பார்க்கவே படபடக்கும் எம் போன்ற சிறுவர்களுக்கு, குதூகலத்திற்கும் குறைவே இருக்காது. மாடுகள் ஓடும் போது எழும் புழுதியும், இரைச்சல் ஆரவாரமும் புத்துணர்ச்சி தரும். கரையோரத்து நாணற்புதற்களில் வசிக்கும் காடைகளுக்கு (quails?) மட்டும் இந்நாள் கலக்கமான நாளாய் இருந்திருந்திருக்கலாம்.

சில மாடுகளுக்கு போட்ட மாலைகள் அலுங்காமல், நகராமல் அப்படியே இருக்கும். பலமாடுகளின் மாலைகள் அறுந்து போய் சக மாடுகளால் அசை போடப்பட்டிருக்கும்.

மாடுகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு, அரக்க பரக்க மயிலாடுதுறை திரைப்பட கொட்டகைகளில் புது படங்களை பார்க்க கிளம்பி ஓடுவர் பலர்…

தமிழர்களில்லையா..?

< முடிவு அசை போடல் >
mani2

Tags: , , , ,

ஒரு பின்னூட்டம்
பின்னூட்டம் இட: »

  1. சுவையாக இருந்தது வாசன்!
    குறிப்பாக – ‘பாட்டன்’ என்ற சொல்லைப் படித்து தான் எத்தனை நாளாயிற்று!

கருத்தளிக்க..