நினைவு தெரிந்து வாழ்ந்த பதினைந்து ஆண்டு கால இந்திய(யா) வாழ்வில், சுதந்திரநாள் பெரிதாக கொண்டாடப்பட்டதாக ஞாபகம் இல்லை. இலவச மிட்டாய்களுடன் கூடிய பள்ளி இல்லாத மகிழ்ச்சி சிறார்களுக்கு. ஊரில் சில முக்கூட்டுகளில் கொடியேற்றம், புளித்துப் போன அரசியல்வாதி பேச்சுகள்; விதிவிலக்காக ஓரிரு தியாகிகளுக்கு நன்றி செலுத்தல்.
ஓகஸ்ட் 15 இந்திய சுதந்திர நாளில்:
அமேரிக்காவில் தெற்காசிய மக்கட்தொகை கணிசமாக உள்ள பெருநகரங்களில், “இந்திய சுதந்திர நாள்” இந்திய மொழி வாரி சங்கங்களால் கொண்டாடப்படவுள்ளது. பல வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருப்பது போலவே கொண்டாட்ட ஊர்வலங்கள்..இத்யாதிகள், இந்த வருடமும். அமேரிக்காவில் வாழ்ந்து கொண்டு, இந்திய மூவர்ணத்தில் உடையணிந்து காட்சியளிப்பர் பலர்.

உள்ளூர் நகரத் தந்தை அல்லது செனடர் முக்கிய விருந்தாளியாக பங்கெடுத்து, எப்போதும் பலரும் சொல்வதைப் போலவே இந்திய புலம் பெயர்ப்பாளிகளை ஆகா! ஓகோ! என புகழ்வர். ஆயினும் கொண்டாட்டக் கூட்டத்தில் பங்கு பெறுவோர் பலர் இந்தியராயிருந்து அமேரிக்க குடிமகன்கள் ஆனவர்கள்; பிறர், கிடைக்கும் முதல் வாய்ப்பில் அமேரிக்க குடிமகன்களாக மாற முனைப்புடன் காத்திருப்பவர்கள். இந்திய ஆங்கில வாரயிதழ்களில் கொண்டாட்டத்தின் படங்கள் வாரக்கடைசியில் பங்கு பெறும், எப்பொழுதும் போலவே.
ஏன் இங்கே -இந்நாட்டில் இந்த கொண்டாட்டம்..? இது எனக்குப் பிடிபடாத ஒரு விடயம். எதை இவர்கள் கொண்டாடுகிறார்கள்..? இந்திய நடுவணரசையா.?
8.15.47 அன்று நாடாளும் உரிமை இங்கிலாந்து அரசிடமிருந்து, மத்தியிலிருந்து ஆளும் இந்தியர்களுக்கு கை மாறியது. இந்நாளை விழாவாக கொண்டாடுவது நம்முடைய மொழி, குமுகாயம், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கொண்டாடுவதே அல்ல. முற்றிலுமாக இல்லை. நம்முடைய கலாச்சாரம் மற்றும் நாம் யாரென்பதற்கும் – இந்திய அரசாங்கத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. நம் இனம், சார்ந்த கலாசாரம் அதன் விழுமியங்கள், இந்திய அரசை சார்ந்திராத ஆழ்ந்த, நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டவொன்று. ஒரு அரசின் இருப்பை-இல்லாமையையும் கடந்து நீடித்திருக்கும்.
மேலும், பிரித்தானியர்கள் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்ற பின்னர் ஓடிவிட்ட 63 வருடங்களில் இந்திய நாட்டை ஆண்டவர்களால் இதுவரை,
1. ஏழ்மையை முறியடிக்க முடிந்ததா.. இல்லை.. எண்ணிக்கையில் உலகிலேயே ஏழைகள் அதிகம் உள்ள நாடு/ உலகின் ஏழைகள் 33% விழுக்காடு வாழும் நாடாகவே உள்ளது, இந்தியா.
2. குப்பை-கழிவு அகற்றுதல் , தடையற்ற மின்சார வரத்து மற்றும் தூய குடிநீர்..இன்றியமையாத இம்மூன்றிலும் இன்றுவரை பெருத்த ஏமாற்றங்களே..
3. ஆமை வேகத்தில் நகரும் நீதித்துறை மற்றும் பொருளுள்ளவர்களுக்கு ஒரு தரம் ஏனையோருக்கு வேறொரு தரம் என்றளவில் மருத்துவம்.
1930/40 களில் நிகழ்ந்த உணவு பஞ்சம் தற்போது இல்லை; மக்களின் கல்வியறிவு ஓரளவுக்கு உயர்ந்துள்ளது -நடுவர்க்கத்தின் வருமானம் உயர்ந்துள்ளது. இவைகளை மட்டுமே முன்னேற்றங்களாக கருதலாம். ஆயினும் இம்முன்னேற்றங்கள் நீடித்து, நிலைக்க இருப்பவைகளாய் இருந்தால் ஏன் பலரும் அரபு நாடுகளுக்கும், சிங்கை, ஆஸ்திரேலியா, கேனடா, அமேரிக்கா வென புலம் பெயர ஆலாய் பறக்கிறார்கள்..?
இப்படி ஆலப்பறப்பவர்கள் போலவே எனது குடும்பமும் புலம் பெயர்ந்தது. பல தலைமுறைகளாய் வாழ்ந்த மண்ணைவிட்டு பெயர்வது இனி முற்றிலும், அறவே அற்று போகும் மண் தொடர்பு என்பது தெரிந்திருந்தும் புலம் பெயர்ந்தோம்.. ஏன்..? வாய்ப்புகள் – வாய்ப்புகளின்மை.. – வளர வாய்ப்புகள் பிறந்த மண்ணில் இல்லை. எதிலும் அரசாங்கத்தின் கை நீட்டல், ஊழல்ல்ல்ல்ல். எம்மைப் போலவே புலம் பெயர்ந்தோரில் பெரும்பான்மையினர் தாங்களாகவே உணர்ந்து புலம் பெயர்ந்தவர்கள் என்றே என்னால் கணிக்கத் தோன்றுகிறது.
நாங்கள் வாழும் அமேரிக்க கூட்டு நாடுகளெனும் யு எஸ் ஏ – சொர்க்கபுரியன்று. இங்கும் வேலை வாய்ப்பின்மை, குற்றங்கள், இனவெறி என இன்னல்கள் நாளுமுண்டு. ஆயினும் ”இக்கணம் வரை” தவறுகள் செய்யாமல்-உழைக்கும் தனிமனிதன் தன் சுயமானத்தை இழக்காமல் வாழ ஏது இக்கட்டுகள் இல்லை இங்கே. இந்நாட்டின் குடிமகன் என்பது பெருமையையும், பொறுப்பையும் அளிப்பதாக உள்ளது. எங்களுடைய தனிப்பட்ட கருத்துகளுக்கு, வாழ்முறைகளுக்கு ஏதும் களங்கம் வந்துவிடவில்லை.
இந்நாட்டில் வசிப்போர் இந்திய அல்லது ஏனைய நாடுகளின் சுதந்திர நாளை ஏன் கொண்டாட வேண்டும்..? இது புரியாத புதிரே.. இந்திய சுதந்திர நாள் அவ்வளவு முக்கியமென்றால், தங்களுடன் பின்னி பிணைந்த ஒரு நாள் எனின், கொண்டாடுபவர்கள் இந்தியாவுக்குச் சென்று இந்தியர்களாக அங்கு கொண்டாடிக் களிக்க வேண்டும், இங்கல்ல. “நாம்” கொண்டாட இங்கு ஜுலை 4 , நீத்தார் (ராணுவ) நினைவு நாள் என நல்நாட்கள் பலவுள்ளன.
இந்திய சுதந்திர நாளை கொண்டாட துளியேனும் மன உந்துதல், அறவே இல்லை.
Technorati Tags: ஆகஸ்ட் 15, இந்தியா, ஓகஸ்ட்15, சுதந்திர நாள்