கடந்த சில நாட்களில் கடிதங்கள் பற்றி தமிழ் வலைப்பதிவாளர்கள் எழுதியிருந்தவை, மனதிற்கு பிடித்தமானதாக உள்ளது. இரு நாட்களாக சில தடவைகள் வேலைக்கு இடையூறாக, மனம் கடிதங்கள் பற்றி லயிக்க வேறு ஆரம்பித்தது. கடிதங்கள் குறித்து பலவகையான என் எண்ண பின்னல்களை வலைப்பதிவு செய்வதுதான் நல்லது என்பதாக தற்போது ஆகிவிட்டது.
அப்பாவிற்கு வரும் கடிதங்கள் ஒரு வலைக்கம்பியில் குத்தப்பட்டு சேகரிக்கப்பட்டிருக்கும். சிறுவனாக இருந்த காலத்தில், குழாய்விளக்கைச் சுற்றும் பூச்சிக்களை பிடிக்க அக்கடிதங்கள் சிலவற்றில் எண்ணெய் தடவி தொங்கவிட்ட போது, இவை கடிதங்கள் என்றெல்லாம் மதிக்கத் தோன்றியதில்லை. உறவுகள் அருகிலேயே இருந்ததால் எப்போதாவதுதான் வீட்டிற்கு கடிதங்கள் வரும். நாகாலாந்தில் வசித்த இராணுவ மாமா எழுதும் அரிதான கடிதங்கள் பெரிதும் உவப்புடன் படிக்கப்படும் எங்கள் குடும்பத்தில். கடைசி பத்தியில் எனக்கென்று சில வரிகள் எழுதப்படிருப்பதை கண்டு என் மனம் பெருமகிழ்ச்சியுறும். அஞ்சல் தலைகள் சேகரிக்க ஆரம்பித்திருந்த காலத்தில், உறவினர் பயணம் சென்றிருக்கும் வீதி குடும்பத்தார்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களுக்கு வந்திருக்கும் கடிதங்களிலிருந்து அஞ்சல் தலைகளை பெற நச்சரித்ததுண்டு.
தமிழக உயர்நிலைப்பள்ளிகளின் ஆறாம் வகுப்பில் ஆங்கிலத்தில் கடிதம் எழுதுவது எப்படி என்பதை சொல்லிக் கொடுப்பார்கள். ஆசிரியருக்கான கடிதத்தின் கடைசியில் Yours Obediently ( தங்கள் கீழ்படிதலுள்ள ) என்பதை எழுத மனம் ஒப்பியதில்லை. பள்ளி முடித்து, தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் வரை பெரிதாக கடிதங்களுக்கும் எனக்கும் நெருக்கம் இருந்ததில்லை, ” நீ வாங்கிய மதிப்பெண்கள் பற்றாது – எங்கள் கல்லூரியில் உனக்கு இடம் கிடையாது”, என்று எனக்கு அனுப்பப்பட்ட இரு கடிதங்கள் தவிர. உள்ளூருக்கு அருகிலேயே தொ.நு.கல்லூரியில் நான் படிக்க, உயிர் நண்பன் ஒருவன் முதலில் திருச்சி பின் சென்னை என இடம் பெயர்ந்தான். அவனுக்கு கடிதம் எழுதவேண்டும் என உந்துதல்கள் இருந்ததுண்டு. வேண்டிய தூர இடைவெளிகள் இல்லாமல் கடிதங்கள் எழுதப்பட வேண்டியதில்லை என்பது மெய்யாக இருந்த எனது சூழலில் பெரிதும் மாற்றம் ஏற்படும் வகையில் 20 அகவையை தாண்டிய சில மாதங்களில் புலம் பெயர்ந்தேன்.
வயது இருபதை தாண்டியிருந்தாலும் இந்தியாவின் சிறு நகரமொன்றிலிருந்து புலம் பெயர்ந்து, இந்தியர்கள் அதுவும் தமிழர்கள் இல்லாத ஊருக்கு குடிபோனது, திக்குத் தெரியாத காடு என்பது திக்குத் தெரியாத பாலையாக இருந்தாலும் அதே போன்றே என்பதை வெளிச்சம் போட்டு காண்பித்தது. மிரள,மிரள விழித்துக் கொண்டு அடுக்ககம் விட்டு வெளிசெல்ல தயங்கிக் கொண்டு கிடந்த எனக்கு, உற்சாகமூட்டும் வகையில் நடந்த முதல் நிகழ்வாக இந்தியாவிலிருந்து எனது (தாய்வழி) தாத்தாவிடம் வந்த கடிதத்தைத்தான் சொல்ல வேண்டும். எப்போதும் போலவே எனக்கு ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதிருந்தார் தாத்தா. பெயரனுக்கு ஆங்கில அறிவு வளரவேண்டும் என்பதற்காகச் செய்தது. அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்த புதிதில் அவரிடமிருந்து வந்த சில கடிதங்களை பின் பலமுறை படித்ததுண்டு. அற்புதமான கையெழுத்து என்னுடைய தாத்தாவிற்கு. ஆங்கில இலக்கணம் பிறழாது. இவைகளுக்கு மேலாக அவருடைய அன்பு ஒவ்வொரு வரியில் வெளிப்படும். அம்மாவிற்கு எழுதும் பத்தியில் அழகுற தமிழில் எழுதியிருப்பார், மு.வ – வின் மாணாக்கர் அவர்.
இந்தியா சென்றிருந்த ஒரு சமயம், டிசெம்பெர் 95ல் நான் ஊருக்கு திரும்ப கிளம்பும் முன், ” என்னை நீ கடைசியாக உயிருடன் பார்ப்பது இதுதான்” என்றார், எனது தாத்தா. கால் நழுவி அதல பாதாளத்திற்குள் சென்றது போன்றொருணர்வு எனக்கு. சுதாரித்துக் கொண்டு, புகைவண்டி நிலையம் வரை வந்து வழியனுப்பி போனார். பெப்ரவரி 96ல் உடல்நல குறைவு ஏற்பட்டு, ஜூலை 96 ல் காலமானார் எனது தாத்தா. ( முன்னாள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் – பேரளம்,நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் )

சென்னை மருத்துவமனையிலிருந்த போது அவர் எழுதிய கடைசி கடிதத்தை பல தடவைகள் படித்துப் பார்த்தாயிற்று. ஒவ்வொரு முறையும் கடந்த கால நல்லுணர்வுகள் மனதில் தளும்பி மறைகின்றன. எப்படி அலுத்துப் போகும்…?
மத்திய 80 களில், இந்தியாவை இழந்த உணர்வுகள் நிறைய மீதம் இருந்த காலத்தில் புத்துணர்வை ஊட்டியவை, நண்பர்களிடமிருந்து வந்து கொண்டிருந்த அஞ்சல்கள் என்பதை நினைப்பதில் மிகப் பெருமை எனக்கு. கடிதமெழுதிய நண்பர்களில் மூவர் அப்போது மாணவர்கள். வெளிநாட்டு அஞ்சலை வாங்க எப்படி அவர்களுக்கு காசு கிடைத்தது என்பதைப் பற்றி நான் நன்றியுணர்வுடன் மருகியதுண்டு. தற்போது இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் உயர் பதவி வகிக்கும் மனு என்ற இரா.மணவாளன் எழுதிய கடிதங்கள் நகைச்சுவையுடன் இருக்கும், யாருக்கு யார் தற்போது **–** மற்றும் “எங்கள்” வீதியில் நடந்த புகுதல்கள்,கழிதல்கள் போன்றவை பற்றி விலாவாரியாக. ஒருதடவை கூட என் நண்பர்கள் அமேரிக்காவிலிருந்து இதை அனுப்பு அல்லது வாங்கி வா என எதையும் கேட்டதில்லை. நான்கு வருடங்களில் இப்படி எனக்கு வந்து சேர்ந்த பல கடிதங்களை சேகரித்து வைத்திருந்த பெட்டி, கூடவே இருந்த 79 நாடுகளின் அஞ்சல் தலைகள் மற்றும் பெரியாரிடம் வாங்கிய கையெழுத்து காகிதம் இவற்றுடன் ஒரு பெரும்பனி நிலவறை வெள்ளத்தில் காணாமற் போனது. தற்போது அவரவருக்கு பொறுப்புகள் கூடுதலாகிவிட்ட நிலையில் நண்பர்களிடையே தொடர்பு முற்றிலும் இல்லாது போய்விட்டது. நட்பை புதுப்பிக்கவாவது ஒரு தடவை இந்தியா சென்று வர வேண்டும்.
1997-98 ல் இணையத்தில் தமிழை கண்ட போது ஏற்பட்ட பெரு மகிழ்ச்சி, மடலாடற் குழுக்கள் வழி பல நல்லவர்களை இனம் கொள்ள முடிந்த போது இன்னும் கூடுதலானது. ஒரு சமயம், மடலாடற் குழுவொன்றில் எழுத்தாளர் தோப்பில் மு.மீரான் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். நான் என் பங்கிற்கு, எனக்கு இதெல்லாம் ஒன்றுமே தெரியாது ஆனால் படிக்க ஆசை இருக்கிறது என சொல்லி பின் மறந்து போனேன். சில வாரங்கள் கழித்து, மண்ணஞ்சலில் தோ.மு.மீரானின் சாய்வு நாற்காலி புத்தகம் வந்திருந்தது. பிரித்துப் பார்த்தால், அமீரகத்திலிருந்து ஆசிப் அனுப்பியிருந்தார், கூடவே நட்பொழுக அவர் எழுதியிருந்த கடிதம். ஏனென்று தெரியவில்லை, இதுவரை பலதடவைகள் படித்துள்ளேன் அவர் கடிதத்தை..

ஒரு நண்பனிடமிருந்து கடைசியாக வந்து மண்ணஞ்சல் என்பதாலும் மற்றும் மனைவி, மகன் தவிர்த்து நண்பர்கள் என்று யாரும் இல்லாததும் ஒரு காரணமாயிருக்கலாம்.
தற்போதைய மின்னஞ்சல் காலத்தில் அஞ்சல்கள் ஏதும் இந்தியாவிலிருந்து வருவதில்லை. மூலைக்கு மூலை தொலைபேசிகள் இந்தியாவில் வந்து விட்டதால் எல்லோரிடமும் உடன் பேச முடிகிறது. தாத்தா உயிருடன் இருந்திருந்தால் ஒரு வேளை கடிதம் எழுதியிருக்கலாம். எழுத்துகள் மூலம் அன்பைத் தெரிவிக்க ரொம்ப பிடிக்கும் அவருக்கு.



12 பின்னூட்டங்கள்
அழகான பதிவு வாசன்
// அப்பாவிற்கு வரும் கடிதங்கள் ஒரு வலைக்கம்பியில் குத்தப்பட்டு சேகரிக்கப்பட்டிருக்கும். சிறுவனாக இருந்த காலத்தில், குழாய்விளக்கைச் சுற்றும் பூச்சிக்களை பிடிக்க அக்கடிதங்கள் சிலவற்றில் எண்ணெய் தடவி // பசுமையாக ஞாபகம் இருக்கிறது
வாசன் ரொம்ப நாளா ஆளைக்காணோம்? ஏன் தமிழ் மணத்துல இணையலையா?
அந்த கம்பியில் குத்தப்படும் கடிதங்கள், எல்லார் வீட்டிலும் இருக்குமில்லே. மு.வா பற்றி குறிப்பிட்டு இருந்தீங்க. அவரோட
புதினங்கள் படித்திருக்கிறீர்களா? படிச்சிருந்தா கொஞ்சம் சொல்லுங்களேன்.
நன்றி முகமூடி, நான் பதிந்த கடித பின்னோட்டங்கள் உங்களுக்கு பிடித்தது என்றறிய.
உஷா
தமிழ் மணத்தில் இணைந்துள்ளதாகத்தான் நினைத்துக் கொண்டுள்ளேன். (உ) வேற்ட் பிரஸ் வார்ப்புருவில் செய்த மாற்றங்கள் சரியில்லாமலிருக்கலாம்.
ரொம்ப வருடங்களுக்கு மு.வ வின் பாவை(அகல்?) விளக்கு (?) படித்தேன். தமிழில் படிக்க வேண்டிய அளவில் கால் பங்கு கூட படிக்க முடியவில்லை.
தற்போது, விட்ட இடத்திலிருந்து தோ.மு.மீரானின் கூனன் தோப்பு புத்தகத்தை படித்துக் கொண்டுள்ளேன். சவாலான வட்டார வழக்கு. சாய்வு நாற்காலி கொடுத்த எதிர்பார்ப்பு படிக்கத் தூண்டுகிறது.
நன்றி உஷா.
வாசன், நல்ல பதிவு மற்றும் நினைவுகள். தமிழ்மணப் பட்டை இப்போது தெரிகிறது.
வாசன், வருக. (சோதனை மறுமொழியும் கூட:-))
பதிவும் நன்றகா உள்ளது
தளமும் நன்றாக உள்ளது
பாராட்டுகள் வாசன்
ரொம்ப நாளைக்கு பின்னர் மனதில் பாரம் ஏற்றிய பதிவு.
அன்பின் வாசன்,
இப்போதுதான் வாசிக்கிறேன் இந்தப் பதிவை.
எப்போதோ நான் எழுதிய் அஞ்சலை இன்னமும் பத்திரமாக
வைத்திருக்கிறீர்கள் என்பதை நினைக்க மனம் நெகிழ்கிறது.
தமிழிணையத்தின் பழைய நினைவுகளைக் கிளறி விடுகிறது
உங்களீன் இந்தப் பதிவு.
நன்றி வாசன்!!
அன்புடன்,
ஆசிப் மீரான்
நண்பர் ஆசிப்பின் பதிவின் மூலம் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
மூத்த பதிவாளராகிய நீங்கள் இன்னும் நிறைய எழுதவேண்டும்.
அன்பு வாசன்.. நன்பர் ஆசிப்மீரான் அவர்ர்களது பதிவில் தந்த சுட்டியை வைத்து இங்கு வந்தேன்.. நல்ல பதிவு. எனக்கும் எனது நன்பன் ப்ரகாஷூக்குமான கடித தொடர்புகளை இன்றும் நான் சேகரித்து வைத்துள்ளேன். உங்கள் பதிவு பழைய நினைகளை கொனர்ந்தது. நன்றி. ஜெயக்குமார்
:em55: உங்களுடைய உற்சாகமூட்டல்களுக்கு மிக்க நன்றி மஞ்சூர் ராசா & ஜெயக்குமார். :em60:
ungal kadaitham yen viralkalukku oru uir koduthathu
பின்னூட்டமிட