யூ எஸ் ஏ விலிருந்தொரு செய்தி குறிப்பு, 2

Feb 13th, 2006 | By வாசன் | Category: அமேரிக்கா

தற்போதைய அமேரிக்க நடுவணரசு அமேரிக்காவில் வசிக்கும் பல இனங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்ரிக்க அமேரிக்க,
ஹிஸ்பானிய அமேரிக்க மற்றும் ஆசிய பின்புலங்களிலிருந்து வந்த அமேரிக்கர்கள் பலரும் அரசில் உயர்பதவிகள் வகித்து வருகின்றனர்.

தற்போது தமிழர் ஒருவர் ஒரு அரசு உயர் பதவிக்காக அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அரசின் மற்றொரு துறையான பாராளுமன்றத்தின் உறுப்பினர்களால் நடத்தப்படும் நேர்முக சல்லடைத் தேர்வுகளுக்குப் பின் இத்தமிழர், நடுவணரசின் நிர்வாகத்துறை இணைச்செயலராக நியமிக்கப்படலாம். தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பெயர் செல்லராஜ் ராஜ்குமார். 70 களில் அமேரிக்காவிற்கு புலம் பெயர்ந்த செல்லராஜ் இரு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர். வருடத்திற்கு 5 பில்லியன் வெள்ளிகளுக்கு மேல் விற்பனை செய்யும் தனியார்த்துறை நிறுவனமான செலனீஸ் நிறுவனத்தின் மேலதிக வளர்ச்சி இயக்குனராக தற்போது பணியாற்றி வருகிறார். 90களில் சில ஆண்டுகள் சிங்கை மற்றும் இந்தியாவில் வசித்துவிட்டு திரும்பவும் அமேரிக்கா திரும்பிய செல்லராஜ், இப்பதிவை எழுதும் பதிவாளரை போன்றொரு மேலோட்டமான குடியரசு கட்சி அனுதாபியாக இல்லாத ஒரு குடியரசு கட்சி தீவிர ஆதரவாளர்.

மனைவி பொன் ராஜாமணி மற்றும் மகன் மேத்யூ ஆகியோருடன் டலஸ் நகரம், டெக்ஸஸில் வாழ்ந்து வரும் செல்லராஜ், எக்சான் நிறுவனம் மற்றும் அமேரிக்க அரசின் மத்திய கருவூலம் ஆகியவற்றில் உயர்பதவி வகித்தவர்.

*********

டலஸ் பெருநகரத்தின் சுற்றுநகரங்களில் ஒன்றான ஆர்லிங்டனிலிருந்து தமிழர் சம்பந்தப்பட்ட மற்றொரு செய்தியொன்று. முழுதும் துயரத்தை மட்டும் உள்ளடக்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கணினித்துறையில் முதுகலை பெற்று, அமேரிக்காவிற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்த சரவணன் ராமசுப்ரமணியன், முதலில் நியுயோர்க் நகரிலும் அண்மை காலமாக ஆர்லிங்டனிலும் வசித்து வந்தார். மதுரையை பிறப்பிடமாக கொண்ட சரவணன் ஆர்லிங்டன் எரிபொருள் விற்பனையகம் ஒன்றிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். கடந்த ஜனவரி 7 அன்று தீயவர்கள் சிலரால் சரவணன் அங்கு கொலை செய்யப்பட்டார். விற்பனையக காசு,பணம் எதுவும் களவாடப்படாதது வியப்பாகவும், வேதனையை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது. இதுவரை கொலைக்கான துப்பு ஏதும் கிடைக்கவில்லை. சரவணனுக்கு வேலை தந்திருந்த பால் நிறுவனம், துப்பு துலக்குபவர்களுக்கு $ 10,000.00 விடைப்பணமாக தர முன்வந்துள்ளது.

சில இந்தியர்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி உடலை இந்தியாவிற்கு அனுப்ப, கடந்த ஜனவரி 16 அன்று மதுரையில் சரவணனின் இறுதி கிரியைகள் நடந்தன. கனவுகளுடன் மேற்கிற்கு புலம் பெயர்ந்து, 32 வயதில் மறைந்து போன சரவணன் தமது பெற்றோர்களுக்கு ஒரே மகன். சரவணனுக்கு இரு தங்கைகள் உள்ளனர்.

4 பின்னூட்டங்கள்
Leave a comment »

  1. ஒரு தமிழனாக, செல்லராஜ் ராஜ்குமார் அவர்களின் சாதனையை கேட்கையில் மகிழ்ச்சியும் வியப்பும் ஏற்படுகிறது.

  2. Nanri…

  3. பிந்தைய செய்தி வருத்தமளிக்கிறது.

  4. [...] ிருக்கிறார். (ஹேட் க்ரைம்?) அஞ்சலி. முழு விவரங்களுக்கு… No Comments &r [...]

கருத்தளிக்க..