Skip to content

வளர்ப்பு பிராணிகள் – பிராணிகள்

நாங்கள் வசிக்கும் தெரு, தெற்கு பார்த்த வீடுகள் பன்னிரெண்டும், வடக்கு பார்க்கும் வீடுகள் எட்டும் கொண்டது. தன் கடைசி நாட்களை கவனத்துடன் எண்ணிக் கொண்டிருக்கும் ஒரு கிழவரின் வீடு தவிர்த்த மற்ற வீடுகள் அனைத்திலும் வளர்ப்பு பிராணிகள் உள்ளன(ர்). எங்கள் வீட்டுக்கு எதிரில் வசிக்கும் பார்க்கர்கள் வீட்டில் இரு தூங்குமூஞ்சி பூனைகள். ஏனைய வீடுகளில் ‘நாய்’ வளர்ப்புப் பிராணியாக பெரும்பான்மை ஆட்சி செலுத்தி வருகிறது. மனிதர்கள், சக மனிதர்களை நன்றி கெட்ட நாயே, அறிவுகெட்ட நாயே, பிச்சைக்கார நாயே என்றெல்லாம் பலகாலமாக வைது கொண்டு வருவதால், வளர்ப்புச் செல்லங்களை வெறும் நாய் என்றெழுத எனது விரல்கள் தயங்குகின்றன. பைரவி, பைரவர்கள் என்றெழுதினால் நானொரு இந்துமதவாதி என தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதாலும், மனமின்றி நாய் என்றே எழுத வேண்டியுள்ளது.

நாய்கள் நிறைந்த இத்தெருவில், இரு வீடுகளில், தலா மூன்று நாய்களுண்டு. சிட்னி தவிர்த்து பிறிதொரு நாயை தத்தெடுக்க நாங்கள் சில தடவைகள் கால்மனதுடன் நினைத்ததுண்டு. மனிதர்களில் பல வகைகளுண்டு. சிலர் தங்களுக்கு வேலை கிடைத்தவுடன், தங்களது வகையினர் மட்டும் முன்னேறும் வகையில் செயல்படுவர். சிலர், இடம் கொடுத்தால் மடத்தை கேட்பது மற்றும் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியது என்பதாக நடந்து கொள்வர். இப்படி விவரித்துக் கொண்டே போகலாம். 10,000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனுடனே சுற்றிக் கொண்டு, அவன் போட்டாலும் போடுவான் பொறையை, என்பதை எதிர்பார்த்து அலைந்து கொண்டிருக்கும் நாய்களும், தங்களது ஆண்டைகள் போலவே சில குணங்களை தம்மகத்தே கொண்டுள்ளன என்பது செரிக்க முடியாத விடயம். ஆனால் அதுதான் உண்மை. இது போன்றவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு, தன்னலமே உருவான சிட்னிக்கு போட்டியாக மற்றொரு நாயினரை தத்தெடுக்க வேண்டாம் என முடிவு செய்தோம்.

வீட்டிற்கு கீழண்டை பக்கத்து வீட்டில் சேண்டி,மைக்கி, ஸ்கூடர் என மூன்று நாய்கள். மைக்கி சடைநாய், சேண்டி எடை அதிகரித்து போன கால்_லி வகை. ஸ்கூடர் ஒரு பிகனீஸ் நாய். அளவில் சிறிதாகவும், அலட்டலில் அதிகமாகவும் குணம் கொண்டது. சப்பை மூக்குடனான சடை முகத்தினள். காலை பிடித்தால் விடாமல் பிராண்ட கூடிய வகை. பின்மாலை வேளையில் பக்கத்து வீட்டு பையன் பள்ளி முடிந்து திரும்ப வந்தவுடன் மூன்று நாய்களும் குதூகலத்துடன் குலைக்கும். மூவரும் குலைப்பதை கேட்ட சிட்னி பதிலுக்கு வானோக்கி ஊளையிடுவது, தினம் நடைபெறுவது. கொடுத்து வைத்தவர்கள் சிட்னியிடும் ஊளையை கேட்டு சிரிப்பது வழக்கம். கடந்த ஞாயிறு மதியம் நாய்களின் குலைப்புகளும், ஊளையும் ஒருசேர எழுந்தன. எழுந்த கூச்சல் அல்லது கும்மாளம் உச்சகதியை அடைந்து பின் ஒப்பாரி வைப்பது போல மாறத் தொடங்கியது. ‘சிட்னி’ ஒரு சோடா குடித்தால் தேவலை என்பதாக கூட நினைத்திருக்கலாம். என்னடா இது, ஞாயிற்று கிழமையன்று இதுகள் இப்படி பிலாக்காணம் வைக்கின்றனவே என வெளியே போய் பார்த்தால், கொஞ்சம் நேரம் கழித்து உண்மை தெரிந்தது.

ஸ்கூடரை காணவில்லை ! இடுக்குகள் வழியே எங்கேயோ ஓடியிருக்க வேண்டும், இது வீதி வாண்டுகள் தீர்மானித்தது. பக்கத்து வீட்டுக்காரரும் அவரது மனைவியும் கவலை மேகம் படர்ந்த முகத்தினராய் வீதி,வீதியாகச் சுற்றத் தொடங்கினர். இந்த இடத்தில் ஒரு உண்மையை விளம்பியே ஆக வேண்டும். கருமமே கண்ணாயினரான ப.வீட்டுக்காரருக்கு ( வாரக்கடைசியில் கோல்ஃப் கண்ணாயினர்) நாய்களுடன் செல்வழிக்க நேரம் இருப்பதாக தெரியவில்லை. மூன்று நாய்களின் கழிவுகளை அகற்ற நேரம் இருப்பதில்லை. வருடத்திற்கு இரண்டு தடவைகள் செய்தால் பெரிது. அவர் வீட்டு கொல்லையில் அங்கங்கே சிறு நாட்டு வெடிகுண்டு குன்றுகளுண்டு. நாலைந்து தடவைகள் இக்குன்றுகள் அருகாமையில் இருந்து கொண்டு ப.வீ.காரர் barbecue செய்து இறைச்சி சமைத்ததை நான் கண்டதுண்டு. சகிப்புதன்மையின் உறைவிடம்,இமயம்,மவுண்ட் ஹேலெனா, க்ராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு என்பதற்கெல்லாம் இவரை சிறந்த உதாரணமாக சொல்லலாம். இப்படி குவிந்து கிடந்த நாட்டு வெடி குண்டுகளை கண்டு அலுத்துப் போய், நாசி நாறி போனதால்தான் ஸ்கூடர் வீட்டை விட்டு ஓடியிருக்க வேண்டும் என்பது என்னுடைய தீர்மானம். ஆயினும் யாரும் நம்ப மறுக்கிறார்கள்.

ஸ்கூடர் வீட்டை வீட்டு ஓடிப்போனதில் எனக்கொரு நட்டமுமுண்டு. கழிவுகளை அப்புறபடுத்தாவிட்டால் நிலத்தடி நீர் கெட்டுப் போகலாம் மற்றும் நகராட்சிக்கு இது குறித்து அறிவிக்க விரும்புகிறேன் என்பனவற்றை ப.வீ.காரரிடம் நிரம்ப நாட்களாக பேச எண்ணியிருந்தேன். துக்கத்திலிருப்பவரிடம் எப்படி சொல்வது இனிமேல்..? இதற்காகவாது ஸ்கூடர் திரும்ப வரவேண்டும். வீதியிலும், பக்கத்து வீதி மின்கம்பங்களிலும் ஸ்கூடரின் காணாமற் போன அறிவிப்புத் துண்டறிக்கைகள் ஒட்டப்பட்டுள்ளன. கண்டு பிடிப்பவருக்கு சன்மானம் உண்டு.

ஏன் இப்படி ஒரு வளர்ப்பு பிராணியை வளர்க்க வேண்டும், அதற்கு ஏதாவது ஏற்பட்டால் வருந்த வேண்டும்..? கடந்த சில நாட்களாக என் மனதில் அவப்போது சுழன்று வந்து சென்று கொண்டிருக்கும் எண்ணமிது. சில நாய்கள் காவலுக்கு உதவலாம். இருப்பினும் அவற்றை பராமரித்து ஊட்டத்துடன் வளர்க்க வேண்டியது பெரும் பொறுப்பாயிற்றே…ஏன் இதனை வலிந்து ஏற்றுக் கொள்கிறோம்..விடை பிடிபடவில்லை.( காட்டாக, சில மாதங்களாக சிட்னிக்கு குளிகைகள் கொடுக்கப்பட்டு வருகின்றது, சருமத்தின் வறட்சி நீங்க மருத்துவர் பரிந்துரைத்தது. 3 மாத குளிகைகள் 80 வெள்ளியாகின்றன. கொலஸ்ராலுக்கு நான் எடுத்துக் கொள்ளும் குளிகைகளின் விலைக்கு கொஞ்சம் குறைவு ). எனக்கு புரிந்தவரை ‘அவை’ நம்மிடம் காட்டும் ஒரு நட்பு, எதிர்பார்ப்பு நம்முடைய ஈகோவுக்கு கொஞ்சம் உணவளிக்கிறது, இது ஒரு காரணம். நமக்கு கீழ்படிதலாக ஒரு உயிர் இருப்பது, நம் கட்டளைகளை ஏற்று நடப்பது மனதிற்கு ஒரு வகையான உவகையை அளிக்கிறது, இது ஒரு காரணம். உயிர்களிடத்து அன்பு செலுத்து என்பதும் ஒரு காரணம். சில சமயங்களில் எரிச்சலையும் செலுத்த வேண்டியிருக்கிறது. எது எப்படியென்றாலும் வளர்ப்பு பிராணிகளின் அண்மை பழக்கமாகிவிட்டால் மாற்றுவது கடினம் என்றே தோன்றுகிறது. எங்களை பொறுத்தவரை முதலில் ஓலிவர். அகால மரணமடைந்த ஓலிவருக்கு பின்னால் தற்போது சிட்னி. சிட்னி இல்லாமல் போக நேர்ந்தால் புதிதாக மற்றொரு நாய் நண்பர், இப்படித்தான் எமது வாழ்க்கை ஓடக்கூடும் என்பதாகத் தோன்றுகிறது.

0o0o0o0o0o0o0o0

பிராணிகள் குறித்து எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்த போது என் நினைவில் வந்து நின்ற ஒரு தமிழ்க் கட்டுரை, பல தடவைகள் படிக்க பிடித்திருந்தது. பிராணிகள் பற்றிய ஒரு நினைவோட்டத்திலிருந்து சில பகுதிகள்.

ஆக்கியவர்: ‘நினைவிலிருக்கும்’ கோபிகிருஷ்ணன்

நூல்: இடாகினிப் பேய்களும், நடைப் பிணங்களும் சில உதிரித்தரகர்களும்

விலை உரூபாய் 40.00 – வெளியீடு: தமிழினி – சென்னை – 14

கோபிகிருஷ்ணனை பற்றி அவர் காலமான போது திண்ணையில் எழுதியிருந்தார்கள். அதன் பிறகு அவர் எழுதியதில் ஆர்வம் ஏற்பட்டு இரு நூல்களை வாங்கி படிக்கவியன்றது. சோடனைகள், பாசாங்குகள், திணிக்கப்பட்ட நகைச்சுவை & சோகம் என்பன கோபியின் எழுத்துக்களில் இல்லை. இவ்வகையான பாணி அல்லது தேர்ந்தெடுத்துக் கொண்ட பாணி என ஒன்றில்லாதது தெளிவாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்துப் போனது. இதுவே பலருக்கு பிடிக்காதவொன்றாகவும் இருக்கலாம். இடாகினி & மானிட வாழ்வு தரும் ஆனந்தம் தவிர்த்த கோபியின் மற்ற நூல்களையும் வாங்க என்ணியுள்ளேன்.

    மகான்கள்

நீங்கள் சர்க்கஸ் பார்த்திருப்பீர்கள். கரடி மோட்டார் சைக்கிள் விடுவதை, யானை ஆசையுடன் அழகியைத் தன் தும்பிக்கையால் தூக்குவதை, நாய் தீ வளையத்தினூடே தாவி வெளியேறுவதை, குதிரைகள் வட்டமாய் ஓடுவதை, புலி இரட்டைக் கயிற்றில் நடந்து சிரமப்படுவதை எல்லாம். மேலோட்டமாக பார்க்க போனால் இது விலங்கின மானுட சங்கமம் போல் தோன்றும். விஷயம் அப்படி அல்ல. மனிதன் இம்மிருகங்களை இம்சைப்படுத்தித் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறான். இதில் உறவு என்பது ஏதும் இல்லை. வன்மம்,ஒடுக்குமுறை என்ற அடிப்படையில் உறவு ஏற்பட எந்தச் சாத்தியமும் இல்லை.

இந்த மிருகங்களும் பூ பறித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது மனிதர்கள் மீதான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.இளம் பிராயத்தில் பாட்டி வீட்டில் புறா வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு நாள் புறாக்களுக்குத் தானியம் வைக்கப் போன என்னைப் புறா ஒன்று டொக் என விரலில் ரத்தம் வருமளவுக்கு கொட்டி விட்டது. இந்த அனுபவம் அதிபர் யாருக்காவது ஏற்பட்டிருந்தால் அவர் சமாதானப் புறாக்களைப் பறக்க விடமாட்டார். ஒரு தடவை அலுவலக ஷெட்’டில் அமைதியாகப் புகைபிடித்துக் கொண்டிருந்த என்னை ஒரு காகம் விருட்டென்று செவிட்டில் தனது இறக்கையால் அறைந்துவிட்டுச் சென்றது. சிகரெட் கீழே விழ, காதை அம்மா என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். நான்கு நாட்கள் இடது காதில் வலி. நான் என் வாழ்நாளில் எந்த ஒரு காகத்துக்கும் தீங்கு நினைத்தது கிடையாது.

விஷயம் தெரியாத சில அம்மாக்கள் தங்கள் மகனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்விக்க சிபாரிசு செய்யும் போது, ‘மூக்கும் முழியுமாகப் பெண் கிளி மாதிரி இருக்கிறாள்’ என இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே கிளி மாதிரி மூக்கும் முழியுமாக இருந்தால் பெண் எவ்வளவு கோரமாக இருப்பாள் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். அப்புறம், கிளி மாதிரி இருந்து சிறிது காலம் வாழ்ந்துவிட்டு அலுத்துப் போகும் போது பறந்து சென்றுவிட்டால்…? திருநிறைச் செல்வ மணாளன் பாடு திண்டாட்டம்தான். இதையெல்லாம் அம்மாக்கள் யோசிக்க வேண்டும். சும்மா பஞ்சவர்ணக் கிளி, மயில், கவ்தாரி என்றெல்லாம் சொல்லப்படாது.

மனித, மிருக துர்குணங்களைப் பற்றி சொன்னது போக நல்லிணக்கங்கள் மீது பார்வையைத் திருப்புவோம்.

வேலாயுதம் என் நண்பர். ஃபிட்டராக பணிபுரிகிறார். நிறைய நண்பர்கள் அவருக்கு. தன் சக்திக்கு மீறி நண்பர்களுக்கு உதவும் குணம் படைத்தவர். பழகுவதற்கு தங்கமானவர். மீர் சாகிப் பேட்டைக்கு போயிருந்த போது வேலாயுதம் வீட்டில் எட்டிப் பார்ப்போம் என்று போனேன். அறையில் சாப்பிடுக் கொண்டிருந்தவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். ” ஒரு சம்பவத்தைப் பாருங்கள்” என்றார். அவர் காட்டிய கூரையின் மூலையில் குறிப்பாக ஒன்றுமில்லை. “என்ன” என்றேன். இப்பொழுது பாருங்கள் என்றார் வேலாயுதம். “க்ளுக் க்ளுக்” என வாயால் சத்தம் எழுப்பினார். அவர் சுட்டிய மூலையிலிருந்து மரநிற பூதாகர பல்லியொன்று தீர்க்கமாகக் கீழே இறங்கி வந்தது. அதன் நடையில் தயக்கமில்லை,பயமில்லை,ஓர் உறுதியும் நட்புணர்வும் தெரிந்தது. நேரே வேலாயுதம் அருகே வந்தது. அவர் ஓரிரு பருக்கைகளைத் தரையில் சிந்தினார். ஒவ்வொரு பருக்கையாக உட்கொண்டது. ஒரு கவள அளவு உட்கொண்ட பிறகு அது தன் இருப்பிடத்துக்குத் திரும்பியது.

” என் ராச் சாப்பட்டுத் தோழன்” என்றார் வேலாயுதன்.

” அருவருப்பாக இல்லையா..? ” என்றேன்.

” அன்பாயிருங்கள் எப்பொழுதும்” என்றார் வேலாயுதம் கனிவுடன்.

ஒரு ஞாயிறு இக்பால் வந்தார் வீட்டுக்கு. ஓவிய நண்பர் எட்வர்டைப் பார்க்க போய்க் கொண்டிருப்பதாகவும் நானும் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அமைதியான இடம். ஜிலுஜிலுவென்ற காற்று. இங்கும் அங்கும் நவீன கட்டிடங்கள். எட்வர்டின் அறைக்குச் சென்றோம். தான் வரைந்த சட்டமிட்ட நவீன ஓவியங்களை எடுத்துக் காட்டினார் எட்வர்ட். மலைப்பும் பிரமிப்பும் என்னுள் ஏற்பட்ட பிராதன உணர்வுகள். பிறகு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

” டீ சாப்பிடுவோமே” என்றார் எட்வர்ட். கேண்டீனுக்குப் போனோம். கூட்டமே இல்லை. சொறி பிடித்த நாய் ஒன்று எட்வர்ட் அருகே வாலாட்டிக்கொண்டு வந்தது. அவர் அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். நான் அவரைப் பார்த்தேன். என் முகபாவம் என் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

” சுத்தம் பார்த்தால் அன்பு கிடைக்காது” என்றார் எட்வர்ட்.

வேலாயுதம் வீட்டில் ஏற்பட்ட தெளிவு இப்பொழுது இரட்டிப்பு துல்லியத்துடன் உட்சென்றது.

3 பின்னூட்டங்கள்

  1. அருமையான பதிவு. ஸ்கூடர் சீக்கிரம் கிடைக்கணுமுன்னு ஆண்டவனை வேண்டுகின்றேன்.

    என்றும் அன்புடன்,
    கோபாலகிருஷ்ணனின் அம்மா(!) துளசி.

    பதிந்தது: Mar-12-06 at 15:13 | நிரந்தர இணைப்பு:
  2. Padma Arvind

    நல்ல பதிவு. வயதான பலருக்கு இங்கே இதுபோன்ற நாய் பூனை நல்ல தோழனாகி போவது உண்மை. புதிய இடம் நன்றாக இருக்கிறது

    பதிந்தது: Mar-12-06 at 17:35 | நிரந்தர இணைப்பு:
  3. நன்றகா உள்ளது

    பதிந்தது: Mar-18-06 at 01:10 | நிரந்தர இணைப்பு:

பின்னூட்டமிட

மின்னஞ்சல் ரகசியம் - தேவை*
*
*