Skip to content

நாக்கின் மகிமை

செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ஈயனும்.. கேட்க, சிந்திக்க நன்றாகவுள்ளது இந்த கூற்று. கீழுள்ள பதிவு வயிற்றுக்கு மட்டும் கொட்டிக் கொள்ளும் ஈய்தல் தொடர்பானது. சிந்திக்க ஏதாவது தப்பித் தவறி தட்டுப்பட்டால் படிப்பவர்கள் மட்டுமே அதற்கு பொறுப்பாவார்கள்.

கன்னாபின்னாவென்று கணக்கின்றி காசை செலவு பண்ணுகிற பேர்வழிகளை கை நீளமான ஆட்கள் என்பார்கள். வாய்க்கு ருசியாய் மூன்று வேளைகள், நான்கு-ஐந்து வேளைகள் என கொட்டிக்கொள்ளும் ஆசாமிகளை நாக்கு நீளமானவர்கள் என்பார்கள். பல தலைமுறைகளாய் நாக்கு நீளமானவர்களாக எனது தந்தையின் குடும்பத்தினர் திகழ்ந்து வருகிறார்கள். குலப்பெருமைக்கு இழுக்கு வரும் வகையில் இது வரை நான் ஒன்றும் செய்ததில்லை. மகனும் இவ்வாறே உருப்பெற்று வருவதை தினமும் மகிழ்வுடன் கண்டு கொண்டு வருகிறேன்.

வெள்ளைக்காரன் இந்தியாவை விட்டு போக இரு வருடங்கள் இருந்த போது எனது ஆயி (தந்தையின் அம்மா) இறந்து போக, இருந்த வீடு வயல்களை விற்றுவிட்டு சீர்காழிக்கு குடியேறினார் தாத்தா. நான்கு குழந்தைகளை வளர்க்க நிறைய பணம் வேண்டியிருந்தது. உட்கார்ந்தே காசும் பண்ணும் சாதியில் பிறந்த தாத்தா, உடனடி நிறைய காசு பண்ண கையிலிருந்த காசு முழுவதையும் திரைப்படத் தயாரிப்பாளரான தூரத்து உறவினரிடம் கொடுத்து, “அன்பு எங்கே..? ” # என்ற படத்தின் தயாரிப்பில் முதலீடு செய்தார். படம் ஊற்றிக் கொள்ள, பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு போட்ட பணத்தை திரும்பி வாங்கினார். திரும்பவும், உட்கார்ந்தே காசு பண்ண, சீர்காழியில் வைரவன்கோடி* என்கிற இடத்திற்கு
எதிரே உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். அக்காலத்து வெட்கமற்ற, வெளிப்படையான சாதியுணர்வுகள் அடிப்படையில் நடத்தபட்டதாம் ஹோட்டேல்! சமதள சாதியினர் மட்டும் சாப்பிடுகிற இடம். தவிசுபிள்ளையை வைத்து ருசியாக சமைத்து தமக்கும் குழந்தைகளுக்கும் சமைத்தது போக பிறருக்கு காசுக்கு சாப்பாடு போடுவதாக திட்டம். கடனுக்கு சாப்பிடுகிறவர்கள் பாதி, கையில் கிடைத்த டபரா,கெண்டிகளை கொடுத்துவிட்டு சாப்பிடுகிறவர்கள் பலர் என்றிருந்ததால் உணவகம் இழுத்து மூடப்பட்டது. பிற்காலத்தில் எனது அப்பா வேலைக்குச் சென்று குடும்பம் தலையெடுக்கும் வரை, முன்பு இருந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டிற்கு குடி புகுந்த போதும், வாய்க்கு ருசியாக சாப்பிட தவிசுபிள்ளை ஒருவரை வைத்திருந்தனர் எமது குடும்பத்தினர்.

இந்த இடத்தில் எமது சொந்த ஊரின் பெயர் இலையமுதுகூடம் என்பதைச் சொல்லிவிட வேண்டியுள்ளது. இதைவிட பொருத்தமான ஊர் பெயர் யாருக்கும் அமையாது.

இப்படியொரு பாரம்பரியமான விடயத்தை உறுதியுடன் கடைபிடித்துக் கொண்டு வந்திருந்த எனக்கு, 1982 தொடங்கி, இப்பின்பற்றல் ஆட்டம் காணும் வகையில் மாற்றங்கள் ஏற்பட்டன. ‘அதிபர் ரேகன்’ தலைவாழை போட்டு வா,வா என்றெல்லாம் அழைக்காமலே நான் புலம் பெயர்ந்து அமேரிக்கா வந்த வருடம், ‘82. மேலே படிக்க காசு சம்பாதிக்க பல ஊர்கள் ஓடியோடி உழைக்க வேண்டிய கட்டாயம். நல்லதொரு நிகழ்வு – என் வாழ்க்கையில் நடந்த முக்கியமான மாற்றம், உழைப்பு அதன் பலனின் ருசியை காண்பித்த மாற்றம். அடிக்கடி பீனிக்ஸ், அரிசோனா போகும் போது மூன்று வேளைகளுக்கும் பத்து வெள்ளிகளுக்கு மேல் செலவு செய்து சாப்பிட்டதில்லை. இப்படியாக கண்டதையும், கிடைப்பதையும் சாப்பிட ஆரம்பித்த எனக்கு, எனக்குள் நிகழும் மாற்றத்தை உணர முடியவில்லை. உணரத் தொடங்கிய போது, காலம் கடந்து விட்டிருந்தது. தலைமுறைகள் பலவாக கலம்,கலமாய் சோத்தைக் கொட்டிக் கொண்டு பருப்பு, சாம்பார்/பொரித்தக் குழம்பு/மோர்க் குழம்பு, ரசம் மோர் என கூட சேர்த்து, இலகுவாக உள்ளிறக்கும் திறன் மங்கிப் போக ஆரம்பித்திருந்தது. ஒரு சேண்ட்விச்சை அல்லது புரித்தோவை சாப்பிடுவது முற்றிலும் பழகிவிட்டது. சாதத்தை சாப்பிட்டுவிட்டு தூக்கக் கலக்கத்துடன் காரோட்டுவது சரிவரவுமில்லை.

என்னதான் சாப்பிடும் உணவு மாறியிருந்தாலும், சாப்பிடுவதை சாதகப் பட்சியாக சாப்பிடும் பழக்கம் இன்றுவரை மாறவில்லை. இது ஒரு குறையா அல்லது பெருமையா என்பது சரிவர பிடிபட்டதில்லை. 1986 தொடங்கி என்னுடன் தனது வாழ்வை சேர்ந்து வாழ தொடங்கிய (ஒரு அசட்டுத் துணிச்சலாய்தான் இருந்திருக்க வேண்டும்) எனது திருமதி, எனது நாக்கின் நீளத்தை அதன் அட்டகாசங்களை வெற்றியுடன் சமாளித்துக் கொண்டு வருகிறார். எப்போதாவது சாப்பிடும் தமிழ் உணவில் புளி வெகு குறைச்சலாக இருக்க வேண்டும், உப்பு அரைக்கால் கல் கூட அதிகமாய் இருக்க கூடாது, அதே சமயத்தில் மாயவரம் பாணி மாறிவிடக்கூடாது போன்ற எனது உரத்த பிடுங்கல்களுக்கு ஈடு கொடுத்தும் வருகிறார். விக்ரமாதித்தியன் கதையில் வரும் போஜனின் நாக்கையே மிஞ்சுமொரு நாக்கிற்கு சளைக்காமல் தீனி போடும் திருமதி விஜி பிள்ளை அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில், அவருடைய உணவு செய்முறைகளை அவவப்போது வலைப்பதியலாமே என்றொரு சிந்தனை பல தடவைகள் சாப்பிடும் போது வந்து போய்க்கொண்டிருந்தது. இதன் அடிப்படையில் கீழேயொரு பாஸ்தா செய்முறையை பதிந்துள்ளேன். பல மாதங்களுக்கு முன்பு, நியு ஃபின்லண்ட், கேனடாவில் வசிக்கும் பாலாஜி பாரி, அவர் பாஸ்தா செய்ய பட்ட கஷ்டம் பற்றி படித்த போது எழுத நினைத்தது. வெகு இலகுவாக சீக்கிரமே செய்யக் கூடியது.

உணவு செய்முறைகளை இந்திய வாசத்துடனான மேற்கத்திய உணவு, முற்றிலும் மேற்கத்திய உணவு மற்றும் கீழத்தஞ்சை தமிழ் உணவு பற்றிய செய்முறைகள் – அமேரிக்க பாதிப்புடன் எனபனவாக, முடியும் போதெல்லாம் எழுத உத்தேசம்.

[ # அன்பு எங்கே படத்தின் தயாரிப்பாளரான ஆச்சாள்புரம் கோவிந்தராஜன் என்பவர், '50 களில் பார்த்திபன் கனவு எனும் வெற்றிப்படத்தை தயாரித்தவர். பலவருடங்களுக்கு முன்பு நடிகர்/தயாரிப்பாளர் பாலாஜி தனது மகளொருவரை கோவிந்தராஜனின் மகனுக்கோ,பெயரனுக்கோ திருமணம் செய்வித்தார் என கேள்விப்பட்டதுண்டு. எப்படி சொந்தம் என்றே தெரியாத ஆனால் எமக்குச் சொந்தம் என சொல்லப்பட ஒருவரோடு, சினிமாக்காரரொருவர் சம்பந்தம் வைத்துக் கொண்டார் என்பது உண்மையா என்பதை நான் தெரிந்து கொண்டு, புளகாங்கிதம் அடைய விரும்பியதுண்டு. உப்புமண் பெறாத இவ்விடயம் பற்றி தெரிந்த தமிழகப்பதிவர்கள் யாரேனும் இருந்தால் சொல்லியுதவுங்கள்.

* வைரவன்கோடி : 50களில், இந்த இடத்தில் நடந்த ஒரு நாடகத்தில்தான் எம்ஜீயாருக்கு மேடை நகர்ந்து கால் முறிந்தது என பிறர் சொல்லிக் கேட்டதுண்டு. ]

பாஸ்தா காய்கறி

தேவையானவை

ஓலிவ் எண்ணை – 3 மேசைக் சிறுகரண்டிகள்

காய்கறிகள்:

ஸ்பினச் கீரை – ஒரு கைப்பிடி அளவு – கழுவி பிரிக்கப்பட்டது

கேரட் – ஒன்று – நீள்வாக்கில் வெட்டி பாதியாக வெட்டப்பட்டவை

காளான்கள் – வெட்டினால் 4 அவுன்ஸ் வருமளவிற்கு அல்லது விருப்பத்தைப் பொறுத்து.

பச்சை, சிகப்பு, மஞ்சள் அமேரிக்க குடமிளகாய்கள் – தலா 1 – நீள்வாக்கில் வெட்டப்பட்டவை

பச்சை மிளகாய் – 5, 6

வாதாம் பருப்பு – 10, 15

கொத்தமல்லி தழை – அளவு விருப்பத்தை பொறுத்து

வெள்ளை வெங்காயம் – அரை – நீள்வாக்கில் வெட்டப்பட்டது

பூண்டு – 2 பற்கள்

பாஸ்தா – 3 கப் ( 8oz) பாஸ்தா

செய்முறை

அவரவருக்கு பிடித்த பாஸ்தாவை பயன்படுத்திக் கொள்ளலாம். பென்-னி (Penne) பாஸ்தா சீக்கிரம் குழையாது மற்றும் வயிற்றை நிரப்புவதாகவும் இருக்கும்.

கீழ் ஒட்டாத வாணலியில் எண்ணையை விட்டு வெங்காயத்தையும் நசுக்கிய பூண்டையும் வதக்கிக் கொள்ளவும்.

இதன் மீது முறையே கேரட், குடமிளகாய்கள், காளான் கடைசியாக கீரை ஆகியவற்றை உப்புத் தூவி போட்டு வதக்க வேண்டும். முழுதும்
வேகவிடாமல், saute செய்ய வேண்டும்.

இவை பாதியாக வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் மிளகாய், கொ.ம.தழைகள் மற்றும் வாதாம் பருப்புகளை ஒரு அரைப்பானில் கொஞ்சமாக உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். விழுது மிகவும் மென்மையாக இல்லாமல் ஓரளவுக்கு கரகரப்பான கலவையாக இருத்தல் நல்லது.

இதற்கு முன் பாஸ்தாவை வேக வைத்து ஒரு வடிப்பானில் நீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனை நிமிடங்கள் வேக வைக்க வேண்டும் என்பதை பாஸ்தா உறையிலிருந்து கண்டு கொள்ளலாம்.

காய்கறிகள் பாதியாக வெந்த பின்னர் அவற்றின் மீது வாதாம் கலவையைப் போட்டு பிரட்டி அதன் மீது பாஸ்தாவை சேர்த்து சில நிமிடங்கள் பிரட்டினால் பாஸ்தா ரெடி.

வாதாம் கலவை பாஸ்தாவிற்கு ஒரு இந்திய ருசியைத் தரும் அதே சமயத்தில் முழுதும் இந்திய உணவாக இராது. பல அமேரிக்க தெற்காசியர்களின் உடல்நலத்திற்கு சரிவராத தேங்காய் கொழுப்பு இல்லாமல் சம ருசியைத்
மட்டும் தருவதாக வாதாம் அமைகிறது.

மீந்து போன பாஸ்தா அடுத்த நாள் சாப்பிடும் போது கூடுதல் ருசியுடன் இருப்பதகவும் உணரப்படலாம்.

அனைத்து படங்களைக் காண

http://www.flickr.com/photos/38589843@N00/sets/72057594091169367

7 பின்னூட்டங்கள்

  1. நன்றி திரு.வாசன்

    கீழே குறிப்பிட்டுள்ள சமையல் வலைப்பதிவில் உங்களுடைய செய்முறையை உபயோகப்படுத்திக் கொண்டேன்

    http://cookoou.blogspot.com/

    பதிந்தது: Mar-26-06 at 14:10 | நிரந்தர இணைப்பு:
  2. வாசன்,

    இங்க ‘பாஸ்த்தா’ பார்த்தேன். இதைப்போல கொஞ்ச நாள்(!) முன்னாலே, போனவருஷம்
    ஒரு செய்முறை போட்டுக்கேன். இங்கே
    பாருங்க.

    நீங்களும் இந்திய மண்ணை விட்டுப் போனது 82லா? அடடா என்ன ஒற்றுமை பாருங்க.

    பதிந்தது: Mar-26-06 at 14:20 | நிரந்தர இணைப்பு:
  3. Padma Arvind

    நான் கூட சில சமயம் யோசித்தண்டு. வீட்டில் இந்திய வாசம் சற்றே சேர்த்து செய்யும் டாகோ, பரிட்டோ இவற்றைன் எளிய த்யார் முறையை எழுதினால் என்ன என்று. தெரியாத செய்முறைகள் தெரிந்துகொண்டு செய்ய வசதியாக உங்கள் பதிவு. ஒன்று அர்விந்தால் (my chef)படிக்க முடியாது:(

    பதிந்தது: Mar-26-06 at 17:49 | நிரந்தர இணைப்பு:
  4. அன்பு நண்பரே!,
    உணவு உண்ணத்தான் தெரியும்.
    இருப்பினும் பல நாட்களூக்குப் பிறகு தங்களின் எழுத்துக்களைப் பார்க்க உண்டான மகிழ்சி உண்டதற்குச் சமமாக உள்ளது.

    பதிந்தது: Mar-26-06 at 18:50 | நிரந்தர இணைப்பு:
  5. ag

    வாதாம் பருப்பு = பாதாம்? அல்லது வேறு பருப்பா?

    பதிந்தது: Apr-22-06 at 09:04 | நிரந்தர இணைப்பு:
  6. ramachandranusha

    ஹூம், விஜியை விசாரித்ததாக சொல்லவும். வேற என்ன? அதே 1986ல் ஆரம்பித்த சோகத்த பகிர்ந்துக் கொள்ளத்தான். இன்னும் எங்க வீட்டு மாயவரத்தாருக்கு சமையல் என்றால் அவியலும், சாம்பாரும்,கூட்டும் பொரியலும், அடையும், வடையும், இட்லி, தோசையும் தினமும் ஆக்கிக்போடும் இன்னொரு துர்பாக்கியவதி.
    வாசன், எடை எவ்வளவு?

    பதிந்தது: Apr-22-06 at 10:19 | நிரந்தர இணைப்பு:
  7. //நடிகர்/தயாரிப்பாளர் பாலாஜி தனது மகளொருவரை கோவிந்தராஜனின் மகனுக்கோ,பெயரனுக்கோ கொண்டு, புளகாங்கிதம் அடைய விரும்பியதுண்டு. உப்புமண் பெறாத இவ்விடயம் பற்றி தெரிந்த தமிழகப்பதிவர்கள் யாரேனும் இருந்தால் சொல்லியுதவுங்கள்.//

    பாலாஜி ஸாருடன் பழக்கமுண்டு. விசாரித்து சொல்கிறேன்.

    னம்ம் நம்மூரு சாப்பாடு ஐட்டத்தை தொடருங்கள்.

    இப்போ அது இளைய மதுக்குடம். அழகான கிராமம்!

    பதிந்தது: Apr-25-06 at 23:53 | நிரந்தர இணைப்பு:

பின்னூட்டமிட

மின்னஞ்சல் ரகசியம் - தேவை*
*
*