தற்காலத்தில் பிரபலமாயிருக்கும் ஹிப்ஹாப் ஆங்கில இசையில் புதியதொரு புயல் நுழைந்துள்ளது. அவருடைய கூப்பிடப்படும் பெயர் மியா. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த மியாவின் உண்மையான பெயர், மாதங்கி அருள்பிரகாசம்.

மாதங்கி மாயா என்றாகியது. தற்போது மியா என்ற பெயரில் புகழ் பெற தொடங்கியுள்ளார் மாயா. பிரிட்டனின் சிறந்த பாடகர்களுக்கு வருடமொருமுறை வழங்கப்படும் மெர்க்குரி பரிசு இவருக்கு இந்த வருடம் கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அண்மையில் ஓகஸ்ட் 7 அன்று நியுயோர்க் நகரத்தின் நடுவண் பூங்காவில் மாயாவின் பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டம் அலைமோதியது. சல்மான் ரஷ்டி – பத்மா லட்சுமி தம்பதியினர், ஹோலிவுட் நடிகை நேடலி போற்ட்மன் போன்ற பெருந்தலைகள் வந்திருந்தனர். பல்வேறு இனங்களை சேர்ந்தோரும் வந்திருந்தனர். பூங்காவின் கோடைகால அரங்கில் இடம் போதாமல் பலரும் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர்.
மாயாவின் “அருளர்” எனும் புது பாட்டுத்தொகுப்பை மக்களிடையே பரவ செய்ய இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கு ஈழப்புலிகளுக்கு வணக்கம் சொல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. காகிதக்கூழால் செய்யப்பட்ட புலி உருவம் மேடையில் நிற்க, மேலே பொம்மை மேற்சக்கர வானூர்தியொன்று செயற்கை பனைமரங்களின் இடையில் பறந்து கொண்டிருந்தது. மாயாவின் தந்தை ஒரு ஈழப்போராளி.
உற்சாகத்துடன் பாடிய மாயாவின் பாடல்களுக்கு கூடியிருந்தோர் கைதட்டி ஆர்ப்பரித்து நடனமாடினர். பிங்கோ,ஹோம்ப்றே போன்ற பாடல்களையும் தனது பிரபலமான கலாங் (galang) பாடலையும் பாடினார் மாயா. பாடல்களின் இடையே கூடியிருந்தோர் பலரும் – இதில் கறுப்பர்,வெள்ளையர் மற்றும் ஆசியர் என பலரும் அடங்குவர், மாயா தமிழில் சில வார்த்தைகளை பாடிய போது, கூடியிருந்தோரும் அச்சொற்களை கூடவே பாடியது மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
புகலிடம் தேடி வந்த தமிழர்களின் அடுத்த தலைமுறையினர், புதியவொரு, அவ்வளவாக கால்பதிக்கப்படாத துறையில் நுழைந்து பெயர் பெற ஆரம்பித்துள்ளது, புலம் பெயர்ந்த தமிழன் என்ற முறையில் நமக்கு நிச்சயம் பெருமிதத்தை அதிகரிக்கும் ஒன்று.
செய்தித் தகவல்: 08.19.05 இந்தியா அப்ரோட் சஞ்சிகை



4 பின்னூட்டங்கள்
Thankx for this info, Vaasan!
ஒரு தமிழரின் முயற்சிகளை, இணையத்தை அறிமுகப்புத்தியதற்கு நன்றி
வணக்கம் டிஜெ, குமரேஷ்.
மாயா போன்றோரை பற்றி படிக்க கிடைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இன்னும் விவரித்து எழுத நேரம் போதவில்லை.
நன்றிகள்.
வாசன்,
டிஜேயும் மாயா பற்றி முன்னர் எழுதியிருந்தார்.
நிதர்சனம்.கொம் தளத்தினர் இன்றைக்கு உங்கள் இந்தப்பதிவினை அருணா என்ற பெயரின்கீழே அள்ளிப்போட்டிருக்கின்றார்கள். முந்தி, பத்ரியின் பதிவு ஒன்றும் செந்தூரன் என்ற பெயரின்கீழே புதினம்.கொம் இனாலே அள்ளிப்போடப்பட்டது. உங்களிடம் கேட்டெடுத்துப் போட்டார்களா என்று தெரியவில்லை. (இருக்காது என்றே நினைக்கிறேன்). இந்த வகையிலே, ஈழத்தமிழர்களுக்காக இவர்கள் குரல் கொடுக்கின்றார்கள் என்ற தோரணையை ஏற்படுத்துவது தலைக்குனிவையும் வெட்கத்தினையும்மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு ஏற்படுத்த முடியும்.
பின்னூட்டமிட